மிருகங்களை விட கேவலமாக நடத்தும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள்: சிறீதரன் எம்பியிடம் கண்ணீர் மல்கிய மருதநகர் மக்கள்!
கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பன்னங்கண்டி- மருதநகர் கிராமத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை நிரந்தரமாக ஒரு காணியும், வீடும் இல்லாத நிலையில், வயல் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போதும் 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.
அங்கு அவர்கள் தொடந்து தெரிவிக்கையில்,
ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் காணி பெற்றுத் தருவதாக கூறி எம்மை ஏமாற்றி தமது அரசியற் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். புதிய கட்டிடங்கள் திறப்பதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் காணி கொடுப்பதற்கான பதிவு என்ற பெயரில் பேருந்துகளில் அழைத்துச் சென்றுவிட்டு அவர்களின் தேவைகள் முடிந்தவுடன் கைவிட்டு விடுகிறார்கள்.
இறுதியில் காணியும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் நடந்து ஊர் திரும்புகின்றோம். இதுவே கடந்த 3வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒரு அரைநிரந்தர வீடு கொடுங்கள் எனக் கேட்டால் பிரதேச செயலர் கேட்கிறார் ஏன் உங்களுக்கு கணவன்மார் இல்லையா? அவர்கள் எங்கே என்று?
அதுபோதாதென்று கதைக்கப்பேச தெரியாதவர்கள் என்றும், யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்றும் உங்களுக்கு தெரியாது என்றும் மிகவும் கேவலமான முறையில் மக்களுக்கு மத்தியில் வைத்து திட்டியனுப்புகின்றார்.
இந்த நிலையில் ஒரு வீடு கேட்டதற்காக மிருகங்களை விடயும் மோசமாக நடத்தப்படுகின்றோம். அரசியல் வாதிகளும் அவ்வாறே நடந்து கொள்கின்றார்கள், காணி கேட்டால் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் டோக்கன் தருகிறார்கள். 15 நாட்களில் வீடு தருகிறோம் என்கிறார்கள். ஆனால் இன்றுவரை 3 வருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றத்தின்போது கொடுத்த தறப்பாள் கூடாரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் யாரிடம் செல்வது, எமது வேதனைகளை தீர்க்க என்ன வழி உள்ளது என்று தெரியாமல் கடும் மழை, சேறு, சகதிகளுக்குள்ளும் வெயிலுக்குள்ளும் வருடத்துக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்து கொண்டு விலங்குகளிலும் பார்க்க மோசமான நிலையில் வாழ்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்விடயம் குறித்து தம்மால் முடிந்த உதவிகளை மிகவிரைவில் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.








