காணாமல் போன கணவரின் வழக்கு விசாரணைகளில் நியாயம் கிடைக்குமா?: சந்தியா ஏக்னலிகொட கேள்வி
கொழும்பில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்தியா ஏக்னலிகொட கருத்து வெளியிட்டார்.
காணாமல்போன தன் கணவர், வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்துவருவதாக 2011ல் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் மொஹான் பீரிஸ் கூறியிருந்ததை சந்தியா சுட்டிக்காட்டினார்.
ஆனால் 2012ம் ஆண்டு ஏக்னலிகொட சம்பந்தமான வழக்கில் நீதிபதி ஒருவர் முன்பு சாட்சியமளிக்கையில், ஏக்னலிகொட இருக்கும் இடம் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று மொஹான் பீரிஸ் கூறியிருந்ததையும் சந்தியா நினைவுகூர்ந்தார்.
இவ்வாறாக தனது கணவன் விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாகியிருக்கும் சூழலில், நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக காணாமல்போனோர் சம்பந்தமாக குரல்கொடுத்துவரும் அமைப்பின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் இந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நியாயம் பெறுவதற்கான கதவும் மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதியாகியுள்ள நிலையில் அடைபட்டுவிடும் என்று தான் கருவதாக மகேந்திரன் கூறினார்.
காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோர் தொடர்பாகவும் நியாயம் கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது என்றும சுந்தரம் மகேந்திரன் குறிப்பிட்டார்.
மொஹான் பீரிஸ் சட்ட மா அதிபராக இருந்த காலகட்டத்தில் இவ்வாறான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று அவர் குற்றம்சாட்டினார்.