ஊசி மருந்து குப்பியில் கண்ணாடி துகள்கள் குறித்த விசாரணை அறிக்கை! இந்தியாவிற்கு அறிவிக்குமாறு உத்தரவு
தெஹிவளை - களுபோவில போதனா மருத்துவமனையில் அண்மையில், ஊசி மருந்து குப்பியில் இருந்து கண்ணாடித் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை துரிதமாக இந்திய அரசாங்கத்திற்கு தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்படும் க்ளோக்சிசிலின் என்ற ஊசி மருந்து இருந்தே கண்ணாடித் துண்டு எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் தேசிய மருந்து பகுப்பாய்வு நிறுவனம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகள் பலவற்றில் இருந்து கண்ணாடித் துண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் இதற்கு முன்னரும் பதிவான நிலையில் அவ்வப்போது இலங்கை இது குறித்து இந்தியாவிற்கு தெரியப்படுத்தி வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது கண்ணாடித் துண்டு மீட்கப்பட்ட மருந்தை இலங்கையில் தடைசெய்வது என்று இன்றைய தினம் சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.