ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் 70 பேர் கொண்ட குழுவினர் பீகார் - புத்தகயா மற்றும் ஆந்திர மாநில, சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி தலங்களுக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தனர்.
தமிழக அரசியல் தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கடவுள் தரிசனத்தில் ஈடுபட்டு பின் பாதுகாப்பாக அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.
ரேணிகுண்டா விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 6.40 மணிக்கு திருமலைக்கு வந்த ஜனாதிபதியை திருப்பதி கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, சித்தூர் ஆணையாளர் சாலமேன், ஆரோக்கியராஜ், பொலிஸ் அதிகாரி ராஜசேகர் பாபு மற்றும் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.
இரவு அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று அதிகாலை 3 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
அங்கு சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு கடவுள் தரிசனம் செய்தார். அதிகாலை 4.15 மணி வரை அவர் கோவிலில் இருந்தார்.
தரிசனம் முடிந்ததும் கோவிலில் உள்ள கொடிகம்பத்தை தொட்டு வணங்கினார். கோவில் ரங்கநாயகர் மண்டபத்தில் ராஜபக்ஷவுக்கு கோவில் அதிகாரிகள் பட்டு வஸ்திரம் அணிவித்தனர். லட்டு பிரசாதங்கள் வழங்கினர். திருப்பதி தேவஸ்தான நாட்காட்டி, மற்றும் நாட்குறிப்புகளையும் வழங்கினர்.
பின்னர் காலை 9.30 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் ரேணிகுண்டா சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
ராஜபக்ஷ வருகையையொட்டி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருப்பதி திருமலை வரை வழி நெடுகிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை ஜி.என்.சி. டோல்கேட், பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் ம.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் ராஜபக்ஷவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அவரை கண்டித்து கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 300 பேரை பொலிஸார் கைது செய்தனர்.